December 30, 2011

புத்தாண்டு வாழ்த்துக்களும் தீர்மானங்களும்...


வணக்கம் நண்பர்களே ! 2011 வருடத்தின் கடைசி நாளில் பதிவின் வழியே உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.கடந்த ஜூலை 15 ல் ஆரம்பித்த இந்த வலைப்பக்கத்திற்க்கு அன்பும் ஆதரவும் அளித்து உற்சாகப்படுத்திய அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி.பொதுவாக ஆண்டின் முதல் நாளில் சில தீர்மானங்கள் எடுக்கின்றோம்.ஆனால் மாதம் செல்ல செல்ல எடுத்த தீர்மானங்கள் காற்றோடு காற்றாய் கரைந்துவிடுவது நம்மில் பலபேருக்கு நிதர்சனம்.இன்றைய பதிவில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களோடு புத்தாண்டில் எடுக்கிற தீர்மானங்களில் தீர்மானமாய் இருக்க சில வழிகளை அலசுவோம்.

  • குறிப்பிட்ட வேலைக்கென்று நேரம் ஒதுக்கி விட்டால் அதை மறுபடி மாற்றிக் கொண்டிருக் காதீர்கள். காலை நேர நடைப்பயிற்சிக்குப் போவது என்று முடிவெடுத்தால், இரண்டு பேர் வருவதற்கு முன்னால் புறப்பட்டுவிடுங்கள்.ஒருவர் பால்காரர். இன்னொருவர் பத்திரிகை போடுபவர். பால்காரர் வருவதைப் பார்த்துவிட்டால், ”ஒரு காபி சாப்பிட்டுப் போகலாம்” என்று தோன்றும். காபி வருவதற்குள் பேப்பர் வந்து விழும். தலைப்புச் செய்திகளை மட்டும் பார்க்கலாம் என்று கையில் எடுப்பீர்கள்.கைகளில் காபி மணக்க, கண்கள் பேப்பரை மேய, வெய்யில் வந்ததுமே ”நாளைக்கு போய்க்கலாம்” என்று எண்ணம் வந்துவிடும்.எத்தனை மணிக்கு எதைச் செய்வது என்று முடிவெடுத்தாலும் அத்தனை மணிக்கு அதை செய்து முடிப்பதே உத்தமம்.
  • நீங்கள் சில வேலைகளை முக்கியமானவை என்று வகுத்துக்கொண்ட பிறகு, தெரிந்தவர்கள் அதில் திருத்தத் தீர்மானம் கொண்டு வருவார்கள். மாலை ஐந்து மணிக்கு யோகா செய்வதென்று முடிவெடுத்து வைத்திருப்பீர்கள். நாலரை மணிக்கு நண்பர் போனில் அழைப்பார். ”பார்த்து ரொம்ப நாள் ஆயிடுச்சு! அஞ்சு மணிக்கு வரவா” என்று கேட்டால், ”அஞ்சரைக்கு முடியுமா?” என்று கேட்பீர்கள். அவர் வேலையிருக்கிறது என்பார். ”அப்ப சரி, அஞ்சு மணிக்கே வந்துடுங்க” என்பீர்கள். அப்படிச் சொன்னால், உங்களுக்கு யோகா முக்கியமில்லை என்று அர்த்தம். 
  • எதற்கு முதலிடம், எதற்கு முக்கியத்துவம் என்பதெல்லாம் நீங்கள் முடிவு செய்கிற விஷயங்கள்.உங்களுக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் உங்களின் அன்றாட நிகழ்ச்சி நிரலை வெளிப் படுத்துங்கள். நேரிலோ, செல்போனிலோ உங்களை எப்போதெல்லாம் அழைக்கலாம் என்பதைத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பழக்கங்களுக்கு நீங்கள் மரியாதை கொடுத்தால் தானே மற்றவர்கள் கொடுப்பார்கள். இதில் எப்போதும் உறுதியாய் இருங்கள்.
  • உடலில் எடையைக் குறைப்பது ஒருவகை வெற்றி. தொழிலில் லாபத்தைக் கூட்டுவது இன்னொரு வகை வெற்றி. இவை அனைத்திற்குமே சில விலைகள் உண்டு. திட்டமிடுவது, நேரம் ஒதுக்குவது, கவனம் குவிப்பது போன்றவையே அவை. உரிய விலைகளைக் கொடுத்தால் பெரிய வெற்றிகளைக்கூட எளிதாய் எட்டலாம் என்பதே சாதனையாளர்களின் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கிற சூத்திரம்.
  • பயன்தரும் நூல்களும், படைப்பாளுமையை மேம்படுத்தும் புத்தகங்களும் இளைஞர்களின் இதயங்களில் புதிய வெளிச்சங்களைப் புகுத்த வல்லவை.பார்க்கும் பழக்கத்தின் பிடியைவிட்டு படிக்கும் பழக்கத்திற்கு எல்லா வயதினருமே மாறிவருவது மிகவும் நல்லது. 

புத்தாண்டில் புத்தகப் பழக்கத்தைப் புதிதாக உருவாக்கிக் கொள்வதற்கென்று சில வழிமுறைகளை வீட்டில் மேற்கொள்ளலாம்.

  • வீட்டில் எல்லோரும் கூடி அமரும் இடத்தின் மையப்பகுதியாக தொலைக்காட்சி இருக்கும் நிலையை மாற்றி, இதுவரை தொலைக்காட்சி இருந்த இடத்தில் அழகிய புத்தக அலமாரி ஒன்றை அமைக்கலாம். தொலைக்காட்சியை சிறிய அறைகள் ஏதாவது ஒன்றிற்கு மாற்றலாம்.
  • மாத செலவுத் திட்டத்தில் புத்தகத்துக்கென்று தொகையை ஒதுக்கலாம். பாடத்திட்டத்தில் உள்ள புத்தகங்கள் நீங்கலாக, பொதுவான புத்தகம் ஒன்றினையாவது ஒவ்வொரு மாதமும் புதிதாக படிக்க வேண்டும் என்கிற பழக்கத்தை சிறியவர்களிடம் குடும்பத் தலைவர்கள் கொண்டு வரலாம்.
  • திருமணம் போன்ற வைபவங்களில் வழக்கமான “மொய்”யுடன் ஏதாவதொரு புத்தகத்தையும் பரிசாகக் கொடுக்கலாம்.புதுமனை புகுவிழா, பிறந்த நாள் போன்ற கொண்டாட்டங்களில் புத்தகங்களை மட்டுமே, பரிசளிப்பது என்கிற பழக்கத்தை ஏற்படுத்தலாம்.வீட்டிலிருக்கும் 
  • வெவ்வேறு வயதினரின் விருப்பங்களுக்கு ஏற்ற புத்தகங்களை சுழற்சி முறையில் மாதா மாதம் வாங்குவதோடு, வீட்டில் இருக்கும் சிறியவர்களை, நூலகப் பரிசளிப்புப் போட்டிகளுக்கு ஆளாக்கி பரிசுகள் தரலாம்.

உறவுகளே ! வருங்கால தலைமுறைகளுக்கு புது வெளிச்சம் தரும் புத்தகங்களின் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்.

 நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


பூக்கின்ற புத்தாண்டு புத்தக வாசிப்பாண்டாக இருக்கட்டும்.


வாழ்த்துக்களோடு பதிவினைப்பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்.

cuteparents ல் சமீபத்திய பதிவினை வாசிக்க அன்புடன் அழைக்கின்றேன்

TOP TEN TIPS FOR GOOD PARENTING 

24 Responses to “புத்தாண்டு வாழ்த்துக்களும் தீர்மானங்களும்...”

Mahan.Thamesh said...
Dec 31, 2011, 8:53:00 AM

புதிய ஆண்டுக்கான நல்ல பல தீர்மானங்களை தந்துள்ளீர்கள் . பகிர்வுக்கு நன்றி உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .


தங்கம் பழனி said...
Dec 31, 2011, 10:04:00 AM

புத்தாண்டிற்கான நல்லதொரு தீர்மானங்களை வழங்கியுள்ளீர்கள்.. பகிர்வுக்கு நன்றி தோழரே..!


இராஜராஜேஸ்வரி said...
Dec 31, 2011, 10:04:00 AM

திட்டமிடுவது, நேரம் ஒதுக்குவது, கவனம் குவிப்பது போன்றவையே அவை. உரிய விலைகளைக் கொடுத்தால் பெரிய வெற்றிகளைக்கூட எளிதாய் எட்டலாம் என்பதே சாதனையாளர்களின் வாழ்க்கை சொல்லிக் கொடுக்கிற சூத்திரம்.

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


தங்கம் பழனி said...
Dec 31, 2011, 10:08:00 AM

புத்தகம்தான் எனது மிகச் சிறந்த நண்பன் என்று அப்துல்கலாமே சொல்லியிருக்கிறார். அத்தகைய புத்தகங்களைப் பற்றியும், அதனை பரிசாகவும் கொடுக்கலாம் என்ற கருத்தையும் முன் வைத்ததற்கு எனது பாராட்டுகள்..!! நன்றி நண்பரே..!!!


veedu said...
Dec 31, 2011, 10:41:00 AM

புத்தகம் என்பது எல்லாருடைய மனதிலும் தூவப்படும் விதை...
வளர்வது தனிமனிதன் மட்டுமல்ல...
சமுதாயம்தான்...மு.மேத்தா அவர்கள் கூறியது...அதை பரிசளிக்கும் தீர்மானத்தினையும் மற்றவையும் கொண்டு வர முயற்சி செய்கிறேன்!


தமிழ்வாசி பிரகாஷ் said...
Dec 31, 2011, 11:32:00 AM

புத்தாண்டில் நல்ல தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என பகிர்ந்த உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.


விக்கியுலகம் said...
Dec 31, 2011, 11:34:00 AM

மாப்ள இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!


Lakshmi said...
Dec 31, 2011, 11:51:00 AM

நல்லதொரு தீர்மானங்கள் சொல்லி இருக்கீங்க. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.


Hotlinksin.com said...
Dec 31, 2011, 11:59:00 AM

வித்தியாசமான பதிவுகளை எழுதி கலக்கும் நண்பரே, உங்கள் பதிவுகளை தினமும் http://www.hotlinksin.com/ இணையதளத்தில் இணைத்திடுங்கள்.


திண்டுக்கல் தனபாலன் said...
Dec 31, 2011, 2:18:00 PM

நாம் வாழ்வை மேம்படுத்த புத்தகம் மிகவும் அவசியம் என்பதை தீர்மானமாக சொன்னதற்கு நன்றி!
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!


! சிவகுமார் ! said...
Dec 31, 2011, 5:42:00 PM

//குறிப்பிட்ட வேலைக்கென்று நேரம் ஒதுக்கி விட்டால் அதை மறுபடி மாற்றிக் கொண்டிருக்காதீர்கள்.//

அடேங்கப்பா. போதிதர்மன் சூர்யாவுக்கே கிளாஸ் எடுத்தது நீங்கதானா?


! சிவகுமார் ! said...
Dec 31, 2011, 5:44:00 PM

//புத்தகங்களின் ஆண்டாகஇந்தப் புத்தாண்டு அமையட்டும்.//

புத்தக ஆண்டு வாழ்த்துகள் தலைவா!


MANO நாஞ்சில் மனோ said...
Dec 31, 2011, 7:08:00 PM

அய்யய்யோ உங்க பதிவு ஒரு நாதாரி காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுருக்கான்ய்யா...!!!


MANO நாஞ்சில் மனோ said...
Dec 31, 2011, 7:09:00 PM

பார்ப்போம் தீர்மானங்களின் படியே நடக்க முயற்சிக்கிறேன்..!!!


MANO நாஞ்சில் மனோ said...
Dec 31, 2011, 7:09:00 PM

புத்தாண்டு வாழ்த்துக்கள்...!!!


Rathnavel said...
Dec 31, 2011, 8:45:00 PM

நல்ல பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.


நண்டு @நொரண்டு -ஈரோடு said...
Dec 31, 2011, 9:26:00 PM

நல்ல தீர்மானங்கள்.
வாழ்த்துக்கள்.


suryajeeva said...
Dec 31, 2011, 9:30:00 PM

புத்தகம் விடியலுக்கு வழி வகுக்கும்... ஆகையால் உங்கள் ஆவலை நான் வழிமொழிகிறேன்
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்


suryajeeva said...
Dec 31, 2011, 9:31:00 PM

http://karuppurojakal.blogspot.com/2011/12/blog-post_471.html

உங்கள் பதிவு இங்கேயும்...


! சிவகுமார் ! said...
Dec 31, 2011, 10:24:00 PM

//MANO நாஞ்சில் மனோ said...
13
Dec 31, 2011 7:08:00 PM
அய்யய்யோ உங்க பதிவு ஒரு நாதாரி காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுருக்கான்ய்யா..///

பதிவுலக ஜேம்ஸ் பான்ட் 0000007 மனோ அண்ணன் வாழ்க.


! சிவகுமார் ! said...
Dec 31, 2011, 10:28:00 PM

//வாழ்த்துக்களோடு பதிவினைப்பற்றிய தங்களது எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்.//

சம்பத், நீங்க சொன்னதை பதிவை சுட்டவர் இப்படி புரிஞ்சி இருக்கலாம்:

வாழ்த்துக்களோடு என் பதிவினை தங்களது பதிவில் பகிர்ந்து கொள்ளுங்கள். :-)


M.R said...
Jan 1, 2012, 4:23:00 PM

நல்ல தீர்மானம் நண்பரே

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே


இராஜராஜேஸ்வரி said...
Jan 2, 2012, 11:51:00 AM

பூக்கின்ற புத்தாண்டு புத்தக வாசிப்பாண்டாக இருக்கட்டும்.


புலவர் சா இராமாநுசம் said...
Jan 2, 2012, 2:51:00 PM

நல்ல தீர்மானங்கள்!
அனைவரும் பின் பற்றுதல்
மிகவும் நன்மை தரும்
நன்றி சகோ!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

புலவர் சா இராமாநுசம்


;