September 7, 2011

பட்ஜெட் போடும் குழந்தைகள்..

நண்பர்களே ! பணத்தின் மதிப்பைபயிற்றுவிக்கும் வழிகள் பற்றி பார்த்தோம்.இனி நம் குழந்தைகளும் பட்ஜெட் போடுவது அல்லது அதனை எப்படி ஊக்கப்படுத்துவது ? என்பது பற்றி பார்ப்போமே.நம் ஒவ்வொருவரது வீட்டிலும் பனிரெண்டு வயது அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால்,அவர்களுக்கு நம் குடும்ப வருமான வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். வங்கி,தபால் நிலையம் ஏன் மளிகை கடை சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு அவர்களையே அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.

முந்நூறு ரூபாய் விலையில் ஒரு பொருளை நம்மவர்கள் கேட்கிறார்களென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள். அதற்கு பதில் தினம் பத்து ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து முப்பதாவது வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் பத்து ரூபாய் அல்லது இருபது ரூபாய் என்று அதிகரிக்கலாம். தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைக்கும் பழக்கம் உருவாகும்.பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

இந்த வயதில் பார்த்தவுடன் ஒன்றை வாங்கியே ஆக வேண்டும் என்று இயல்பாகவே அவர்களுக்குத் தோன்றும்.இளம் வயதிலேயே அது அவசியமா? அப்படியே அவசியம் என்றாலும் அதை எப்படி வாங்குவது? என்பதையும் கற்றுக்கொடுத்துவிடவேண்டும்.இதனால் ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.

எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள்.நீங்கள் மதிப்பிடும் பொருள் சரியான விலைதானா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம். உங்கள் மனதில் தோன்றிய விலையை போடுங்கள். இதே முறையை உங்கள் குழந்தைகளையும் கடைப்பிடிக்கச் செய்யுங்கள். சில நாள் பயிற்சியிலேயே ஒரு பொருளின் சரியான விலையை அறியும் ஆற்றல் வந்துவிடும்.

இப்படி அடுத்தடுத்து குழந்தைகள் போடும் பட்ஜெட்டால் அவர்களின் சுயமதிப்பு,வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்ளும் திறன் தானாக உயர வழிவகுக்கும்.

நண்பர்களே இந்த பட்ஜெட் பதிவு தங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் தங்கள் கருத்துக்களையும்,வாக்குகளையும் வழங்கிவிட்டுச் செல்லுங்களேன்..

6 Responses to “பட்ஜெட் போடும் குழந்தைகள்..”

suryajeeva said...
Sep 8, 2011, 1:24:00 PM

இதை என் மனைவிக்கு காட்ட வேண்டும் என்று ஆசை வந்தாலும், என்னை கிண்டல் பண்றீங்களா என்று கோபித்துக் கொள்வாளோ என்று பயமும் வருகிறது... கல்யாணம் செய்த புதிதில் என் மனைவிக்கு சொல்லிய அறிவுரைகள் இவை, பத்து வருடங்கள் கழிந்தும் அது ஏட்டு சுரைக்காயாகவே இருக்கிறது..


உங்கள் நண்பன் said...
Sep 8, 2011, 5:20:00 PM

கடைபிடிக்க வேண்டிய கருத்துகள். பகிர்வுக்கு நன்றி


சம்பத்குமார் said...
Sep 8, 2011, 8:27:00 PM

@ suryajeeva

நண்பரே.. தங்கள் வருகைக்கும் ஒளிவில்லாமல் கருத்திட்டதிற்கும் மிக்க நன்றிகள்

நட்புடன்
சம்பத்குமார்


சம்பத்குமார் said...
Sep 8, 2011, 8:28:00 PM

@உங்கள் நண்பன்
//கடைபிடிக்க வேண்டிய கருத்துகள். பகிர்வுக்கு நன்றி//

வருகைக்கும் கருத்திற்க்கும் மிக்க நன்றி நண்பரே..

நட்புடன்
சம்பத்குமார்


Rathnavel said...
Sep 10, 2011, 3:50:00 PM

அருமையான பதிவு.
நாம் கடைகளுக்கு செல்லும்போது குழந்தைகளையும் கூட்டிச் செல்ல வேண்டும். அவர்களுக்கும் எல்லோருடனும் பழகும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
வாழ்த்துக்கள்.


சம்பத்குமார் said...
Sep 10, 2011, 8:36:00 PM

@ Rathnavel

தங்களின் வருகை மட்டற்ற மகிழ்ச்சியை வாரி வழங்குகிறது நண்பரே..

தங்களின் கருத்திற்க்கு மிக்க நன்றி

நட்புடன்
சம்பத்குமார்


;